சமீபகாலமாக சுவிட்சர்லாந்தில் குறைந்த விலைக்கு வீடு விற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில், Maggiore ஏரிக்கரையில் அமைந்திருக்கும் தெற்கு சுவிஸ் நகரமான Gambarognoவில், rustici என்று அழைக்கப்படும் கல் வீடுகளை ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு கிடைக்கிறது என்றதும், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை வாங்க முன்வந்தார்கள்.
ஆனால், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நகரத்தில் வீடு வாங்கிய ஒரு பெண், அந்த ஒரு சுவிஸ் ஃப்ராங்க் வீடு, Waste என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்த வீடு குறித்து அடுக்கடுக்காக புகார்களை அள்ளிக்குவித்துள்ளார் பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பெண்.
அந்த கல் வீடுகளை, குடியிருக்கும் வீடுகளாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கூறியுள்ளார் அவர்.
தானும் விளம்பரத்தை நம்பி, ஒரு ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு வீடு ஒன்றை வாங்கியதாக தெரிவித்துள்ள அந்தப் பெண், ஆவணங்களில் எல்லாம் கையெழுத்திட்டு முடித்தபிறகுதான் தெரிந்தது, அந்த வீட்டுக்காக எவ்வளவு வேலை செய்யவேண்டியுள்ளது என்பது என்கிறார்.
அந்த வீடுகள் ஏரியைப் பார்த்தவண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டுக்கும் ஏரிக்கும் சம்பந்தமே இல்லை என்றும், தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ இல்லை என்றும் சரமாரியாக புகார்களை அடுக்கியுள்ளார் அவர்.
அந்த வீடுகளில் கூரையும் இல்லை, ஜன்னல்களும் இல்லை, தண்ணீர் இணைப்பும் இல்லை, மின் இணைப்பும் இல்லை, விதிகளின்படி சூரிய சக்தி மின் அமைப்பையும் பொருத்தக்கூடாது.
ஆக, அந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்கிறார் அவர்.
தண்ணீர் பிரச்சினையை கஷ்டப்பட்டு சரி செய்தாலும், கழிவு வெளியேற்றும் அமைப்பு இல்லை. வீட்டை வெப்பப்படுத்த விறகுகளை மட்டுமே பயன்படுத்தமுடியும்.
அந்த வீடு வெகு தொலைவில் இருப்பதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதும் கஷ்டம், பார்க்கிங் வசதி ஒரு மணி நேர தொலைவில்தான் உள்ளது, அங்கு நீங்கள் நடந்தேதான் செல்லவேண்டும். ஷாப்பிங் செல்வது எப்படி, பொருட்களை வாங்க கடைக்கு செல்வது எப்படி என தொடர்ந்து பல கேள்விகளை எழுப்புகிறார் அவர்.
அத்துடன், வீட்டை சரி செய்வதற்கான பொருட்களை கொண்டு வர ஹெலிகொப்டர்களைத்தான் ஏற்பாடு செய்யவேண்டும். மற்றபடி போக்குவரத்து வசதி இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஹெலிகொப்டருக்கு ஆகும் செலவு 400 சுவிஸ் ஃப்ராங்குகள்!
மொத்தத்தில் அந்த கல் வீடுகள் Waste என்கிறார் அவர்.
வேண்டுமானால், பண வசதி உள்ள ஏதாவது ஒரு அமைப்பு அந்த வீடுகளை வாங்கி, பழுது பார்த்து, ’விடுமுறை கேம்ப்’ போன்ற ஒன்றை வேண்டுமானால் அமைக்கலாம் என்கிறார் அவர்.
இதற்கிடையில், அந்த வீடுகள் குறித்த செய்தி வெளியானபோதே, அந்த வீடுகள் உடனடியாக குடியேறும் நிலையில் இல்லை, அவற்றை புதுப்பித்த பிறகுதான் அதில் குடியேற முடியும் என்று கூறியிருந்தார் நகர மேயரான Gianluigi Della Santa.
அப்படி அந்த வீடுகளைப் புதுப்பிப்பதற்கே, பல்லாயிரக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகள் தேவைப்படும். அத்துடன், வீட்டிற்கான திட்டத்துக்கு உள்ளூர் கவுன்சில் ஒப்புதலும் அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.