இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ரு.1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பது மற்றும் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 20 நாட்களுக்குள் இலங்கை கடற்படை மீனவர்களை 3 முறை விரட்டி அடித்ததோடு சிறை பிடித்தும் சென்றுள்ளது.
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 43 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 10 விசைப்படகுகளும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டில் அங்குள்ள துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய- மாநில அரசுகள் கொடுத்த உறுதிமொழியை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்.
2-வது முறை கடலுக்கு கடந்த சனிக்கிழமை மீனவர்கள் செல்ல வேண்டும். ஆனால் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் அவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நேற்று ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சிறிய பிளாஸ்டிக் படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்ககூடாது, புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதல் மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அவர்கள் உயிர் பிழைத்தால் போதுமென அவசரம் அவசரமாக மீன்பிடி பணியை பாதியில் விட்டுவிட்டு புறப்பட்ட போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு அதில் 9 பேர் ராமேசுவரம் திரும்பியுள்ளனர். மத்திய- மாநில அரசுகளின் உறுதியை ஏற்று நாங்கள் கடலுக்கு சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்து இருப்பது எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் திடீரென கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கியதால் சில மீனவர்கள் காயமடைந்தனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ரு.1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. எனவே எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.