திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக 18 வயதான யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கைத்தொலைபேசியில் வந்த தவறான அழைப்பே இந்த விபரீத முடிவு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மேற்கு பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியொருவரே, நேற்று (11) இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மதியம் 2 மணிக்கு வீதியோரம் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின்படி – 18 வயதான அந்த யுவதிக்கு தொலைபேசியில் தவறிய அழைப்பொன்று வந்துள்ளது.
அந்த அழைப்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் முகம் தெரியாமலே தொலைபேசியில் காதலித்து வந்தனர்.
தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக காதலன் கூறியதையடுத்து, நேற்று முதன்முறையாக இருவரும் சந்தித்து கொண்டனர். ஜஸ்கிரீம் கடையொன்றிற்கு தன்னை அழைத்துச் சென்று, ஐஸ்கிரீம் வாங்கித் தந்ததாக தெரிவித்துள்ளார்.
நேற்று, தனது தாயாருடன் பேசுவதற்கு அழைத்துச் செல்வதாக காதலன் கூறியுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் காதலன் தன்னை அழைத்துக் கொண்டு, திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதியொன்றிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
அங்கு தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், நீர் அருந்தி விட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், காதலனின் நண்பர்களென தெரிவித்து அங்கு வந்த 3 பேர், தனது கால்களையும் கைகளையும் அழுத்திப் பிடித்து, வாயை பொத்தி, பலாத்காரத்திற்குள்ளாக்கியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பின்னர் காதலன் அங்கு வந்ததாகவும், தனது கைத்தொலைபேசி, நகைகள், 40,000 ரூபா பணத்தை பறித்து விட்டு, வீதியோரத்தில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள் என முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் திக்கம் பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியென்பதால், இந்த முறைப்பாடு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் துன்னாலை பகுதியை சேர்ந்தவர்கள். துன்னாலை பகுதியை சேர்ந்த கும்பலொன்று தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் ஊடாக யுவதிகளிற்கு காதல் வலை விரித்து, திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, இதுபோல மோசடியில் ஈடுபடுவதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த வருடமும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த யுவதியொருவரை பேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, முள்ளிப்பகுதிக்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கி விட்டு தலைமறைவான துன்னாலையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.