இனிமேல் காருக்கு உள்ளே தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்லாதீர்கள். அது ஏன்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக வெயில் காலங்களில் உடலில் போதுமான அளவிற்கு நீர் இருப்பது அவசியமாகிறது. எனவே வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. காரில் பயணிக்கும்போதும் கூட பலர் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர்.
ஆனால் ஒரு தவறை நம்மில் பலரும் செய்கிறோம். சூடான காரில் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்வதுதான் அந்த தவறு. சூடான காரில் தண்ணீர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தண்ணீர் பாட்டில் காரணமாக தீப்பிடிக்கலாம் என்பதுதான் முக்கியமான அபாயமாக பார்க்கப்படுகிறது.
தண்ணீர் காரணமாக தீப்பிடிக்கும் என்பது உங்களுக்கு புரளியை போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் என்ன நடக்குமென்றால், தண்ணீர் காரமணாக தீப்பிடிக்காது. மாறாக பிளாஸ்டிக் பாட்டில் தீ பிடிப்பதற்கு காரணமாக இருக்கலாம். பொதுவாக ஜன்னல் கண்ணாடிகள் வழியாக காருக்கு உள்ளே சூரிய ஒளி அதிகளவில் ஊடுருவும்.
அப்போது தண்ணீர் பாட்டில் வழியாகவும் சூரிய ஒளி ஊடுருவி செல்லும். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில் அதிக அளவு சூடாகி விடும். காரின் வெளியே இருக்கும் வெப்ப நிலையை விட காரின் உட்புறத்தில் அதிக வெப்ப நிலை நிலவும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் இதனை நீங்கள் எளிதாக உணர முடியும்.
தண்ணீர் பாட்டிலின் எந்த இடத்தில் சூரிய கதிர்கள் அதிக அளவு ஊடுருவுகிறதோ, அந்த இடம் தீப்பிடிக்கும் அளவிற்கு வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சூடான காருக்க உள்ளே தண்ணீர் பாட்டிலை வைத்ததால், தீப்பிடித்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. ஒருமுறை பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அப்போது காரின் உள்ளே அமர்ந்திருந்த நபர், காருக்கு உள்ளே திடீரென புகை வருவதை கண்டார். என்ன ஆனது? என்பதை பார்த்தபோது, தண்ணீர் பாட்டிலில் சூரிய ஒளி அதிகமாக ஊருடுவிய இடத்தில் தீ பற்றி தொடங்கியிருந்ததை அவர் உணர்ந்தார். இருக்கையில் துளை ஏற்படும் அளவிற்கு தீ பற்றியதாக அவர் அப்போது தெரிவித்தார்.
ஆம், தண்ணீர் பாட்டிலை இருக்கையில் வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதன் காரணமாக இருக்கை சேதம் அடைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் மேற்கண்ட சம்பவத்தின்போது பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்பது அதிர்ஷ்டவசமான விஷயம். இது தொடர்பாக நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான வெப்பம் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீருக்குள் வெளியிடும் பிபிஏ எனப்படும் பிஸ்பெனால் ஏ (Bisphenol A – BPA) போன்ற அபாயகரமான ரசாயனங்களின் அளவு அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து. எனவே தண்ணீர் பாட்டில் அதிக வெப்பத்தில் இருக்கும்போது தீ பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இதுதொடர்பான ஆய்வுகளையும் நிபுணர்கள் நடத்தியுள்ளனர். நிபுணர்கள் ஒரு மாத கால அளவிற்கு, ஒரு சில தண்ணீர் பாட்டில்களை மிகவும் சூடான இடங்களில் வைத்து கொண்டனர். சுமார் 150 டிகிரி வெப்ப நிலையில் அந்த பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது சாதாரணமாக வெளிப்படும் அளவை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக பிபிஏ ரசாயனம் வெளிப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர்.
எனவே காருக்கு உள்ளே தண்ணீர் பாட்டிலை ஒருபோதும் வைத்து செல்லாதீர்கள். சரி, அதற்காக தண்ணீர் பாட்டிலை காரில் எடுத்து செல்லாமல் இருக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்பதுதான் அதில். இதற்கு மாற்று வழிகள் இருக்கின்றன. காரை பார்க்கிங் செய்து விட்டு செல்லும்போது, தண்ணீர் பாட்டிலை நீங்கள் கையிலேயே எடுத்து சென்று விடலாம்.
அல்லது இருக்கைக்கு அடியில் தண்ணீர் பாட்டிலை போட்டு வைக்கலாம். இதன் மூலம் சூரிய வெளிச்சம் விழுவதற்கான வாய்ப்புகள் குறையும். அத்துடன் தீ பற்றுவதற்கான வாய்ப்புகளும் குறைந்து விடும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக ஆபத்துக்களை குறைத்து கொண்டு, மகிழ்ச்சியான கார் பயணத்தை மேற்கொள்ளலாம்.