ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த தடையை ஒரு பொருட்டாகவே வட கொரியா கருதவில்லை. ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இந்த முறை ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரெயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட கொரியா கூறி உள்ளது.
இந்த மாதம் வடகொரியா மூன்றாவது முறையாக ஏவுகணைகளை கடலில் வீசி சோதனை செய்ததைக் கவனித்ததாக தென் கொரியாவின் ராணுவம் கூறிய மறுநாள் வட கொரிய அரசு ஊடகம் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்த இந்த சோதனையானது, ராணுவத்தின் ரெயில் ஏவுகணைப் படைப்பிரிவின் எச்சரிக்கை நிலையை சரிபார்க்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென வந்த அறிவிப்பு மற்றும் ஏவுகணை சோதனைக்கான உத்தரவை தொடர்ந்து, ராணுவத்தினர் விரைவாக ஏவுதளத்திற்கு சென்றதாகவும், கடல் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் இரண்டு வழிகாட்டுதல் ஏவுகணைகளை ஏவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பெட்டிகளில் இருந்து இரண்டு வெவ்வேறு ஏவுகணைகள் சீறிப் பாய்வது போன்ற புகைப்படங்களை ரோடாங் சின்முன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.