பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் சத்துக்களைக் கொண்டு கூந்தல், சரும அழகை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து பார்ப்போமா?
கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைந்த பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை தரும். மேலும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஆரோக்கியமான பானமாக கருதப்படும் பால் கூந்தலுக்கும் பலம் சேர்க்கும். மிருதுவான, மென்மையான மற்றும் சுருக்கமில்லாத சருமத்திற்கும் வழிவகுக்கும். பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் சத்துக்களைக் கொண்டு கூந்தல், சரும அழகை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து பார்ப்போமா?
கால்சியம்: எலும்புகளுக்கு மட்டுமல்ல, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவை. உடலில் இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் உதவும்.
வைட்டமின் டி: முடி உதிர்தலை மீட்டெடுப்பதற்கு வைட்டமின் டி உதவும். புதிய மயிர்க்கால்களை தூண்டவும், தடைப்பட்ட முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும் துணைபுரியும்.
வைட்டமின் சி: இது கோலாஜன் உற்பத்தியை அதி கரிக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும்.
புரதம்: தலைமுடி கெராடின் என்ற புரதத்தால் ஆனது. அதனால் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், அவற்றை வலிமையாக்குவதற்கும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் புரதம் அளவு குறைந்து போனால், தலைமுடி பலவீனமடைந்துவிடும். உலர்ந்தும் போய்விடும். முடி வளர்ச்சி தடைபடுதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
பயோட்டின்: இது பாலில் கலந்திருக்கும் ஒருவகை ஊட்டச்சத்தாகும். முடி உதிர்தலை தடுத்து அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு துணைபுரியும். மயிர்க்கால்களின் வளர்ச்சி வீதத்தையும் அதிகரிக்கச்செய்யும்.
தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலிமையாகவும் வைத்திருப்பதற்கு பால் கொண்டு செய்யப்படும் மசாஜ் குறித்து பார்ப்போம்.
1. ஹேர் மாஸ்க்: பால் மற்றும் வாழைப்பழம் பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் இது. தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் மாற்றவும், பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணவும் உதவும்.
தேவையான பொருட்கள்:
பால் – அரை கப், வாழைப்பழம் – 1
செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போடவும். அதனுடன் பால் சேர்த்து மில்க் ஷேக் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த விழுதை தலைமுடியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு ‘ஷவர் கப்’ எனப்படும் மெல்லிய இழையால் தலையை மூடிவிடவும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
2. தயிர்-தேன்: இது கூந்தலில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவும். கூந்தல் மென்மையான தன்மைக்கு மாறுவதற்கும் வழிவகை செய்யும்.
தேவையானவை:
தயிர்- 3 டேபிள்ஸ்பூன், தேன் -1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அதனை கூந்தலில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு ஷாம்பு கொண்டு கழுவிவிடலாம்.
3. நெய்-எண்ணெய்: முடி வளர்ச்சியைத் தூண்டுதல், உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைத்தல், முடியை மென்மையாக்குதல், பொடுகை போக்குதல் என இந்த எண்ணெய் சிகிச்சை பலன் அளிக்கக்கூடியது.
தேவையானவை:
நெய்- 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை: தலைக்கு வழக்கமாக தேய்க்கும் எண்ணெய்யுடன் நெய்யை சேர்த்து சிறு தீயில் லேசாக உருக்கவும். நெய் உருக தொடங்கியதும் அந்த எண்ணெய் கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கூந்தல் முழுவதும் தேய்த்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
சரும நிறத்தை மேம்படுத்துவதற்கும், வயதான தோற்றத்தை தடுத்து இளமையை தக்கவைப்பதற்கும் பாலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பால்-அரிசி: இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
தேவையானவை:
பால் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலையும், அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.