பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் பலியான ராணுவ வீரர்கள்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி அந்நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்கு சில பயங்கரவாத அமைப்புகளும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தின் கேச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், பலர் காயமடைந்தனர் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.