மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.சுகுணன் தெரிவித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் கொழும்பு கம்பஹா, தவிர்ந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று 100க்கு மேற்பட்ட நோயாளிகளும் 20 க்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் 40 க்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 தினங்களில் 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அபாயத்தை உணர்ந்தவர்களாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கே.சுகுணன் அறிவுறுத்தியுள்ளார்.