திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமில் இன்று முற்பகல் இடம்பெற்ற விமானப்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிவை மேம்படுத்திக்கொள்ள, தொடர்ச்சியான திறன்மேம்பாடு மற்றும் அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக விமானப்படையினரால் நாட்டுக்காகச் செய்யப்பட்ட சேவைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கு, ஜனாதிபதி தமது பாராட்டுக்களை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் தொழில்நுட்ப கரமாக விமானப்படையின் முழுத்திறனும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு, விமானப்படை அதிகாரிகளின் தொழில்திறமைகள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் முழுமையாக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
06 பாடநெறிகளின் கீழ், மூன்றரை முதல் நான்கரை வருடக் காலப்பகுதிக்குள் 153 பேர் தங்களது பயிற்சிகளை இன்று நிறைவு செய்தனர்.
விமானப்படை வரலாற்றில், அதிகப்படியான அதிகாரிகள் ஒரே தடவையில் பயிற்சிகளை நிறைவு செய்தமை இதுவே முதல் தடவையாகும்.
விமானப்படையின் விமானி கெடெட் அதிகாரிகள் இருபது பேர் மற்றும் பெண் விமானி கெடெட் அதிகாரிகள் அறுவருக்கு, ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வ இலச்சினை அணிவிக்கப்பட்டது.
அனைத்துப் பயிற்சிகளின் போதும் விசேட திறமையை வெளிக்காட்டிய கெடெட் அதிகாரிகள் 14 பேருக்கு, ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.