புற்றுநோய் தொடர்பில் மிகுந்த கவனம் வேண்டும்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி உலக புற்று நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து கடலூர் சுரேந்தரா பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரன் கூறுயதாவது:-

நம் உடலின் வளர்ச்சிக்கு காரணம் செல்கள் பிரிந்து பெருகுவதே. இதுவே கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் புற்றுநோய் உண்டாகிறது. இது உடலின் பிற பகுதிகளுக்கு பரவி, மற்ற தசைகளையும் தாக்குகின்றன. இதையே நான்காம் நிலை புற்று நோய் என்று அழைக்கிறோம். அவ்வாறு பரவுவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், அத்தகைய புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த சிகிச்சைகள் தற்போது உள்ளன.

காரணிகள் என்ன ?

புகைப்பிடித்தல், மது அருந்துதல், தவறான உணவு முறைகள், உடல் பருமன், இவை மாற்றக்கூடிய காரணிகளாகும். அதிகரிக்கும் வயது, குடும்பம் மூலமாக பரவும் பாதிப்பு, இவை மாற்ற இயலாத காரணிகள் ஆகும். மாற்றக் கூடிய காரணிகளை தவிர்த்தும், மாற்ற இயலாத காரணிகள் இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டறிதல் மூலம் புற்று நோயை வெல்ல முடியும்.

அறிகுறிகள்

உடலில் ஏற்படும் தழும்பு மற்றும் வீக்கம், ஆறாத புண்கள், தொடர்ந்து அஜிரணம் மற்றும் உணவு உட்கொள்ளும்போது பிரச்சனை, விளக்க முடியாத உடல் எடை குறைவது. தொடர் இருமல் மற்றும் குரல் மாற்றம். ரத்தப்போக்கு மற்றும் அதிகப்படியான வயிறு வலி. நோயின் தன்மைக்கு ஏற்ப இந்த அறிகுறிகள் மாறலாம்.

சிகிச்சை முறைகள்

தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அதிநவீன சிகிச்சை முறைகளை பின்பற்றினால் முன்பைவிட நோயாளிகள் அதிக அளவில் குணமடைகின்றன. புற்றுநோய் ஒரு உறுப்பை பாதித்து விட்டால், அந்த உறுப்பை அகற்றாமல் நோயை குணப்படுத்துவது நவீன மருத்துவத்தின் இலக்காகும்.

அதன்படி அறுவை சிகிச்சை கீமோதெரபி, ரேடியோ தெரபி, மட்டுமின்றி, டார்கடட் தெரபி, இம்மினோ தெரபி என பலவிதமான நவீன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே உடலில் ஏற்படும் கோளாறுகள், அறிகுறியை அலட்சியம் செய்யாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு, சிகிச்சை பெற வேண்டும்.