குழந்தைகள் சண்டையும்… பெற்றோர் கையாள வேண்டிய முறையும்….

குடும்பத்தில் மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. பெற்றோர் சரியான விதத்தில் கையாண்டால் இதனை எளிதாக தீர்க்கலாம்.

குடும்பத்தில் மூத்த குழந்தைக்கும், இளைய குழந்தைக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. பெற்றோர் சரியான விதத்தில் கையாண்டால் இதனை எளிதாக தீர்க்கலாம். அதற்கு சில வழிகள்:

பொறுப்பை உணர்த்துங்கள்:

ஒரே குழந்தையாக பல வசதிகளை அனுபவித்து வளரும் இடத்தில், இன்னொரு குழந்தை வரும்போது, இயற்கையாகவே பொறாமை ஏற்படும். இரண்டாவது குழந்தையின் மீது பெற்றோர் செலுத்தும் அக்கறையும், அன்பும் மூத்த குழந்தைக்கு இளைய சகோதர, சகோதரிகள் மீது வெறுப்பு ஏற்பட வைக்கும். இந்த நிலையை மாற்றுவதற்கு இளைய குழந்தையின் தேவையைக் கவனிக்கும் பொறுப்பை, மூத்த குழந்தையிடம் ஒப்படையுங்கள். இதன் மூலம் மூத்த குழந்தை இயல்பாக, இளைய குழந்தையிடம் பழகும்.

முக்கிய தருணங்களை ஏற்படுத்துங்கள்:

வீட்டில் சாதாரணமாக இருக்கும் நாட்களில்கூட, இரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான தருணங்களை உருவாக்குங்கள். விளையாட்டுகள், வீட்டு விசேஷங்கள் போன்ற சமயங்களில் இரு குழந்தைகளையும் ஒரு அணியாக இணைந்து பங்கேற்கச் செய்யுங்கள். இதன் மூலம் இருவரிடையேயும் புரிதல் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும், மூத்த குழந்தைக்குத் தனது சகோதர, சகோதரிக்குக் கற்று தரும் பண்பும் மேம்படும். இதன் விளைவாக கருத்து வேறுபாடு மறைந்து இணக்கமான சூழல் ஏற்படும்.

போட்டியில் பங்கேற்கச் செய்யுங்கள்:

கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் குழந்தைகளை பங்கேற்கச் செய்யலாம். அந்த சமயத்தில், போட்டிக்கு தயாராவதற்கு ஒரு குழந்தை, மற்றொரு குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும். இதன் காரணமாக இருவரிடையேயும் கற்றுக் கொடுக்கும் பண்பும், பொறுப்புணர்வும் ஏற்படும்.

நண்பர்களாக்குங்கள்:

குழந்தைகளிடம் பழகும்போது, பெற்றோர் என்ற உணர்வுடன் பழகாமல், அவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ளும் வகையில், நண்பர்களாக மாற வேண்டும். இரு குழந்தைகளுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டைக் களையவும் இதே உத்தியைப் பயன்படுத்தலாம். அவர்களைச் சகோதரர்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்து, நண்பர்களாக பழக முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் இருவருக்குமிடையே எப்போதும், சிறந்த தகவல் பரிமாற்றம் ஏற்படும். இது எதிர்காலத்தில் இருவருக்கும் இடையேயான புரிதலுக்கு வழிவகுக்கும்.

பாராட்டி, பரிசளிக்க வையுங்கள்:

இரு குழந்தைகளையும், வயது வித்தியாசம் காரணமாகக்கூட வேறுபடுத்திப் பார்க்காதீர்கள். மூத்த குழந்தை வளர்ந்திருந்தாலும், இளைய குழந்தை என்று வரும்போது, மனதிற்குள் பொறாமை குணம் எட்டி பார்க்கும். எனவே, பெற்றோர் இதைக் கவனமுடன் கையாள வேண்டும். இரு குழந்தைகளும் சிறந்த செயல்கள் செய்யும்போது, ஒரு குழந்தை மூலம் மற்றொரு குழந்தைக்குப் பரிசளித்துப் பாராட்டச் செய்யுங்கள். இது அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். பொறாமைக் குணத்தை நீக்கும். மேலும், உத்வேகத்துடன் செயல்பட வைக்கும்.

குழந்தைகளின் எண்ணத்தைப் புரிந்து சிறிய விஷயங்களில் மாற்றம் செய்தால், இரு குழந்தைகளுக்கும் இடையே வயது வித்தியாசம் என்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தாது.