வங்குரோத்து நிலைக்கு சென்றது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை மின்சார சபை உட்பட பல அரச நிறுவனங்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாத காரணத்தினால், கூட்டுத்தாபனம் வங்குரோத்து அடைந்து விட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை எதிர்காலத்தில் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால்,அதற்கு எதிராக மிகப் பெரிய தொழிற்சங்க போராட்டத்தில் இறங்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கி, இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வங்குரோத்து அடைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 25 ரூபாவிலும் பெட்ரோலை 18 ரூபாவிலும் அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் மண் எண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.

500 மில்லியன் டொலருக்கு இந்தியாவின் மூன்று நிறுவனங்களிடம் அரசாங்கம் எரிபொருளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கை பெட்ரேலியக் கூட்டுத்தாபனம் மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார்.