மன்னாரில் சிறுவன் ஒருவன் பரிதாப மரணம்

மன்னாரில் உள்ள ஓலைத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (05-02-2022) சனிக்கிழமை காலை மன்னார் – தலைமன்னார் வீதீயில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இவ் விபத்து குறித்து தெரியவருவதாவது, மன்னார் – கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் கிராமத்தில் இருந்து பேசாலை பகுதியிலுள்ள நடுக்குடா பகுதிக்கு சென்று விட்டு மறு நாளான நேற்று சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

ஓலைத்தொடுவாய் வீதிக்கூடாக முச்சக்கர வண்டி திரும்பிய போது பின் புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக வந்த மீன் ஏற்றும் கூலர் வாகனம் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியும், பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகி வீதிக்கு அருகில் வெள்ள நீருக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மேலும் இவ்விபத்தில் பலத்த படுகாயங்களுக்குள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது 30), மகன்களான கெபின் கரன் (வயது 6), கானோர் ( வயது 1) ஆகியோருடன் முச்சக்கர வண்டிச் சாரதியும் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் மகன் கெபின்கரன் (வயது 6) மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனைய மூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த கூலர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.