குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது.
தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.
இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.