ராஜபக்சர்களுக்கு நாட்டை ஆள அருகதை கிடையாது – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் சொத்துக்களை கூறுபோட்டு விற்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு இந்த நாட்டை ஆளுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கபீர் காசிம் இதனைத் தெரிவித்திருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் வாழ்க்கைச் செலவு 100 இற்கு 10 வீதிமாக அதிகரித்தால், அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கு இருக்கிறது.

இரவு இருக்கும் விலை, காலையில் இருப்பதில்லை. அந்தளவிற்கு நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது. இதனால் சிறு மற்றும் மத்திய வியாபாரங்கள் செய்வோரே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மையான மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குள் தள்ளிய அரசாங்கம், சிறு பகுதியினரை கோடிஸ்வரர்களாக மாற்றியுள்ளது.

மத்திய வங்கியில் காணப்பட்ட தங்கத்தினை விற்று காசு தேடியுள்ள அரசாங்கம் இன்று, கையிருப்பினை இல்லாமல் செய்யும் நிலையை ஏட்டியுள்ளது.

தற்போது டொலர் பிரச்சனையை கையாள புறக்கோட்டை முதலாளிகளிடம் டொலர்களைப் பெற்றுக்கொள்ளப் போவதாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்தினால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

அவர்களிடம் டொலரைப் பெறலாம் என்றால் ஏன் அரசாங்கம் எனக் கேட்க விரும்புகிறோம். நாட்டின் சொத்துக்களையும், நிலங்களையும் கூறுபோட்டு விற்பனை செய்யும் ராஜபக்சர்களுக்கு இந்த நாட்டை ஆளுவதற்கு எந்த அருகதையும் இல்லை” என்றார்.