யானைக் குட்டியை பயமுறுத்தி டிக் டொக் செய்த சாரதிக்கு நேர்ந்த விபரீதம்!

ஹபரணை வீதியில் யானைக் குட்டி ஒன்றை பயமுறுத்தி துன்புறுத்தும் வகையில் டிக் டொக்கில் காணொளி செய்து வெளியிட்ட சாரதி வன ஜீவராசி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் திருகோணமலை – ஹபரணை வீதியில் இடம்பெற்றுள்ளது.

மின்னேரிய தேசிய பூங்காவின் பாதுகாவலர் உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் எடுக்கப்பட்ட டிக்டொக் காணொளியில் வாகனம் ஒன்றின் சாரதி வீதியில் சென்ற யானைக்குட்டி ஒன்றை நெருங்கி செல்வதையும், அதை குறுக்கிட்டு விரட்ட முயற்சிப்பதுமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது.

சந்தேகநபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், 2,00,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

பிரபல ஹொலிவூட் திரைப்பட நடிகர் லியனாடோ டிகெப்ரியோ, இலங்கையில் காட்டு யானைகளுக்கு ஏற்படும் துயரமான நிலைமையை குறித்து தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

இலங்கையில் மனிதர்கள் தூக்கி எறியும் மக்காத குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு செல்லும் காட்டு யானைகள் அவற்றை உண்டு மரணிப்பது தொடர்பான விடயத்தை அவர் உலகத்திற்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.