சரும-கூந்தல் பராமரிப்புக்கு பின்பற்ற வேண்டியவை.

சரும பராமரிப்பில் சுத்தம் செய்வதுதான் முதல் படியாகும். எனவே, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. சோம்பேறித்தனமும் கூடாது.

புது வருடம் தொடங்கும்போது ஒவ்வொருவரும் ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு சபதம் எடுப்பார்கள். சிலர் தீய பழக்கவழக்கங்களை கைவிடுவதற்கும், நல்ல பழக்கங்களை தொடர்வதற்கும் தீர்மானிப்பார்கள். பெண்களை பொறுத்தவரை தங்கள் இலக்குகளுடன் சரும அழகை பேணும் விஷயத்தையும் தவறாமல் சேர்த்துக்கொள்வார்கள். எளிமையாக பின்பற்றக்கூடிய சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு தீர்மானங்கள் குறித்து பார்ப்போம்.
சருமத்துக்கு…

சுத்தம்:

சரும பராமரிப்பில் சுத்தம் செய்வதுதான் முதல் படியாகும். எனவே, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. சோம்பேறித்தனமும் கூடாது.

கொரிய மற்றும் ஜப்பானிய தோல் பராமரிப்பு நடைமுறையில், ‘டபுள் க்ளென்சிங்’ என்ற சொல் வழக்கத்தில் உண்டு. இந்த முறையை பின்பற்றி முகத்தை இரண்டு முறை சுத்தம் செய்து, அனைத்து அசுத்தங்களையும் அகற்றலாம். முதலில் எண்ணெய் சார்ந்த அசுத்தங்களை அகற்ற ‘கிளென்சர்’ மூலம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் ஒப்பனை, சீபம், சன்ஸ்கிரீன் போன்ற எண்ணெய் சார்ந்த அசுத்தங்களை அகற்றிவிடலாம். அடுத்ததாக, சருமத்தில் படர்ந்திருக்கும் மாசுபாட்டை போக்குவதற்கு நீர் சார்ந்த சுத்தப்படுத்தியை பயன் படுத்த வேண்டும். இவைதான் முகத்தை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். இருப்பினும், இது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யலாம்.

ஈரப்பதம்:

முகத்தை சுத்தப்படுத்திய உடனேயே, ஈரப்பதமாக்குதல் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இரண்டாவது படியாகும். இது சருமத்தை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். சரும நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர் கொண்டு சருமத்தில் ஈரப் பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த செயல் முறையின்போது உதடுகள் உலர்வடையாமல் ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்வதும் முக்கியமானது.

சன்ஸ்கிரீன்:

சூரியனிடம் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் சருமத்திற்கு சேதம் விளைவிப்பவை. அவற்றில் இருந்து சருமத்தை பாதுகாப்பதே சன்ஸ்கிரீனின் முக்கியமான பயன்பாடாகும். எனவே, இந்த புத்தாண்டில், வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவுவதற்கு மறக்க வேண்டாம். சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி அணிந்து முகத்தை மறைக்கலாம்.

மேக்கப்:

இது நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அகற்றாமல் விட்டுவிட்டால் பல தோல் பிரச்சினைகளை ஏற் படுத்தும். எனவே, தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை அகற்றி விடுங்கள். அதற்கு சிறந்த எண்ணெய் சார்ந்த க்ளென்சரை பயன் படுத்தலாம்.
கூந்தலுக்கு….

எண்ணெய் மசாஜ்:

தலைவலி முதல் மன அழுத்தம் வரை எல்லா உடல் நலப்பிரச்சினைகளுக்கும் மசாஜ் சிறந்த தீர்வாக அமையும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. உடலின் மற்ற பாகங்களை போலவே, தலைமுடிக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எண்ணெய்தான் அதனை நிவர்த்தி செய்யும். எனவே அவ்வப்போது தலைமுடிக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிலும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்.

கூந்தல் கழுவுதல்:

வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும். ஆனால் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெய் தன்மை நீங்கிவிடும். அதனால் கூந்தல் வறண்டு போய்விடும். இதனை தவிர்க்க, கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

சீப்பு பயன்படுத்துதல்:

குளித்து முடித்ததும் நிறைய பேர் சீப் கொண்டு தலைமுடியை அலங்கரிக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி ஈரமான தலைமுடியில் சீப்பை பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. தலைமுடி மிகவும் பலவீனமடைந்துவிடும். முடி உடைந்து போகவும் வாய்ப்புள்ளது. எனவே சீப்பு பயன்படுத்துவதற்கு முன்பு முடியை நன்கு உலர விடவேண்டும். அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன் படுத்துவதும் நல்லது.

வெப்பத்தை தவிர்த்தல்:

தலைமுடியை தாங்கள் விரும்பிய வடிவம், ஸ்டைலுக்கு கொண்டு வருவதற்கு நிறைய பேர் ஹீட்டர் பயன்படுத்துவதுண்டு. அதில் இருந்து வெளிப்படும் வெப்பம் தலைமுடியை கடுமையாக சேதப்படுத்தும். அதனால் கூடுமானவரை ஹீட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.