விலங்குகள் மீதான பரிசோதனைக்கு தடை விதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு அந்நாட்டு மருந்துத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 500,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு துறை தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் வலுப்பெற்றுள்ளது. இதை ஆதரிப்பவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிகரெட் விளம்பரங்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்புடன் இணைந்து விலங்குகள் பரிசோதனையை தடை செய்வது குறித்த வாக்கெடுப்பும் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் அடிப்படையில் விலங்குகள் வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்வதற்கு தடை விதிப்பதா வேண்டாமா என்பதை சுவிஸ் அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தடை விதிக்கப்பட்டால் உலகிலேயே மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்த முதல் நாடாக சுவிட்ர்சலாந்து இருக்கும்.
இதனிடையே புதிய மருந்துகளை உருவாக்க விலங்குகள் மீதான ஆராய்ச்சி தேவை என்று அந்நாட்டு மருந்து தயாரிப்பு தொழில்துறை தெரிவித்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி பிரச்சாரம் செய்வோருக்கு மருந்து தயாரிப்பு துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.