ஐக்கிய ராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களில் இறுதி கொள்கலன் தொகுதி இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருப்பியனுப்படுகிறது.
இதன்படி 45 கொள்கலன்கள் திருப்பியனுப்பப்படவுள்ளதாக சுங்கத்தின் சமூக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் 2019ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
மீள் ஏற்றுமதி செய்வதற்காக படுக்கைகளுக்கான மெத்தைகளில் உள்ள உலோகங்களை இறக்குமதி செய்வதாக பொய்யான காரணம் கூறியே இந்த கழிவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
எனினும் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதியன்று, இறக்குமதி செய்யப்பட்ட 242 கொள்கலன்களும் மீள ஐக்கிய ராச்சியத்துக்கு அனுப்பப்படவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.
இதனையடுத்தே அவை ஐக்கிய ராச்சியத்துக்கு அனுப்பப்பட்டு இன்று இறுதி தொகுதி அனுப்பப்படுகிறது.
ஏற்கனவே வெளியாகியிருந்த தகவல்களின்படி குறித்த கழிவுப்பொருட்கள் இலங்கையின் கடலில் புதைப்பதை நோக்காகக் கொண்டு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.