ஹோட்டல் ஒன்றிற்கு பிரபல வர்த்தகர் ஒருவரை அழைத்து சென்ற இளம் யுவதி ஒருவர், 39 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து வர்த்தகரின் சொகுசு காருடன் தப்பிச் சென்ற நிலையில் யுவதியை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரே இவ்வாறு இங்கிரியவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச்செப்பட்ட நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வர்த்தகரின் கார் இங்கிரிய, அரக்கவில பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் காரில் இருந்த 1.9 மில்லியன் ரூபா பணமும் திருடப்பட்டதாக கூறியுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் 25 பவுண் தங்க நெக்லஸ்கள், 6 பவுண் எடையுள்ள இரத்தினக்கல் மோதிரம் மற்றும்ஈரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 8 பவுண் பதக்கமும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய, பாதுக்க வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வர்த்தகரும், யுவதியும் வந்த பின்னர், யுவதி மட்டும் ஹொட்டலில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார். இதனையடுத்து ஹொட்டல் அறையில் எந்த சத்தமுமில்லாததால், அதனை நிர்வாகத்திறனர் திறந்து பார்த்த போது, படுக்கையில் மயக்கமடைந்த நிலையில் வர்த்தகர் காணப்பட்டார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் ஹொட்டல் முகாமையாளரால் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதுடன் வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மயக்கநிலையில் இருந்த வர்த்தகர் சுயநினைவு பெற்ற பின்னர் பொலிசாரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
தனது நண்பர் ஒருவர் கொடுத்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு யுவதியுடன் பேசியதாகவும் , இருவரும் உல்லாசமாக இருக்க வேண்டுமென வர்த்தகர் விரும்பியதையடுத்து, மறுநாள் இருவரும் ஹொட்டலிற்கு வந்துள்ளனர். அத்துடன் தன்னிடமிருந்த 39 பவுண் நகைகள், சொகுசு கார் என்பன திருடப்பட்டு விட்டதாக வர்த்தகர் தெரிவித்தார்.
ஹொட்டல் அறையில் உள்ள சிசிரிவி கமரா காட்சியில், இருவரும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும் குடிப்பதும் பதிவாகியிருந்ததுடன் சிறிது நேரத்தில் யுவதி அங்கிருந்து வெளியேறியமையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மாயமான யுவதியை தேடி வருகின்றனர்.