வவுனியாவில் இளைஞர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயம்

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா – வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் இளைஞர் குழுவொன்று கைகலப்பில் ஈடுபட்டுள்ளது.

பொது மக்கள் செறிவாக வாழும் பகுதியாகவும், பல கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ள இடத்திலேயே இந்த அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.

பொல்லுகள், போத்தல்கள், கல்லுகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் குழுவின் அட்டகாசம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்த போதும் தாமதமாக வந்த பொலிஸார் சந்தேகநபர்களை அவர்கள் அங்கிருந்து விரட்டி விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, வைரவபுளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதும், அவர்கள் சீராக அப்பகுதியில் கடமையில் இல்லாமை காரணமாகவே குறித்த அசம்பாவிதங்கள் தொடர்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Gallery