ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை – எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்னம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி உடலையும் குறிக்கும், சந்திரனானது ஏதாவது ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும். அதுவே பிறந்த ஜென்ம நட்சத்திரமாகும்.ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர். அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவர் ஜாதகரின் உடலை இயக்குவார். கர்மவினைக்கு ஏற்றவாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக திகழ்பவர்கள் ஜென்ம நட்சத்திர அதிபதிகள்.
இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.
எனவே ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் அந்த அதிதேவதையின் கோவிலுக்கு சென்று ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக விசேஷ அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை செய்தல் நன்று. வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். வாய்ப்பு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனையாவது செய்ய வேண்டும்.
ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை – எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. உள்ளுணர்வு சிறப்பாக இயங்கி தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
பலர் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இது தவறு. அவர் பிறந்த மாதத்தின் அதே நட்சத்திரத்தில் கொண்டாடுவது தான் நல்லது. அப்போது தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் அவர் பிறப்பின் போது இருந்தது போலவே அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதிதெய்வம் அல்லது உபாசனை தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100 சதவீதம் வெற்றி நிச்சயம்.