அனல்மின் நிலையம் பாதிப்பிற்கு உள்ளாகுமா?

அடுத்த மாதத்திற்குள் நிலக்கரியை ஏற்றிய எட்டு கப்பல்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை விடுவிக்கும் சவாலை இலங்கை மத்திய வங்கி எதிர்நோக்கியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய அனல் மின் நிலையமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் சிக்கல் இன்றி முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள கோடைக்காலத்திற்கு முன்னதாக எட்டு கப்பல்களில் வரும் நிலக்கரியை தரை இறக்க வேண்டியுள்ளது.

இந்த நிலக்கரியை ஏற்றிய இந்த எட்டு கப்பல்களை அடுத்த மாதம் இலங்கைக்கு வரவழைக்க தேவையான வங்கி கடன் பத்திரத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

எட்டு கப்பல்களில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் மெற்றி தொன் நிலக்கரி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவையான 2.25 மில்லியன் மெற்றி தொன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

அத்தியவசிய உணவு பொருட்கள், மருந்து மாத்திரமல்லாது எரிபொருளை இறக்குமதி செய்வதிலும் டொலர் பிரச்சினை இடையூராக உள்ளது.

இப்படியான நிலைமையில் நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்பட்டால், சுமார் 900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நின்று போகும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.