இலங்கை கடற்கரையை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படை பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் இக்கப்பலுக்குச் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அக்கப்பலின் தளபதி மொகமட் இக்ரம் கிழக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்திருந்தார்.

எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் சுழியோடல் குறித்து மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறு பேர் பயணிக்கும் வசதிகொண்ட இரு கலங்களையும் மூவர் பயணிக்கும் வசதியுடனான ஒரு சுழியோடல் கலத்தையும் இந்திய கடற்படைக்கப்பலான நிரீக்‌ஷாக் (A-15) கொண்டுள்ளது.

அத்துடன் ஆபத்தில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை மீட்கும் திறனையும் சுழியோடிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் ஆற்றலையும் கொண்டதாக இக்கப்பல் காணப்படுவதாக தெரியவருகிறது.

இலங்கை கடற்படையினருக்கான இதேபோன்ற சுழியோடல் பயிற்சிக்காக இக்கப்பல் 2019 செப்டெம்பரிலும் திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.