சிறிது காலத்தில் பல பேரை பலியெடுத்த அருவி!

மொனராகலை வெல்லவாய பிரதேசத்தில் எல்லவல அருவியில் குளிக்க சென்ற 13 பேர் குறுகிய காலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி அருவியை பார்க்க சென்று அருவிக்கு கீழே உள்ள நீரேந்து பகுதியில் குளித்த பல்கலைக்கழக மாணவர் மற்றும் பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கரைபற்று பிரதேசத்தை சேர்ந்த ஏழு பேர் மற்றும் காலி சேர்ந்த மூன்று பேர் அருவியில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர்.

இவர்களில் ஒரு காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 21 வயதான அப்துல் ஹசீஸ் கயாசி, 22 வயதான அமீம் றிசார்ட் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஹசீஸ் உயர் தரம் படித்து வரும் மாணவர் என்பதுடன் றிசார்ட் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் என தெரியவருகிறது. இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள பிரதேச சபைத் தலைவர், அருவியில் குளிக்க சென்ற 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குளிப்பதற்கு தடைவிதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்தாது அருவியில் குளிக்க சென்றதால், இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இளம் உயிர்களே பலியாகி வருகின்றன. பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.