இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து நிபந்தனை விதிக்கும் இந்தியா

இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உரிய திட்டங்களை முன்வைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டங்களுக்கான பட்டியலை இந்தியா, இலங்கையிடம் கோரியிருப்பதாக ஆங்கில செய்தி இதழ் ஒன்று கூறியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையிடம் இருந்து அற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்தியாவிடம் இருந்து அவசர கடனை பெற்றுக்கொள்வதில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகின்றது என்றும் ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான முயற்சியின்போதும் , அவசர எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்காக வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடனை பெறும் முயற்சியின் போதும் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய பயணம் இரண்டு தடவைகள் ரத்துச்செய்யப்பட்டிருந்தன.

எனினும் அந்த பயணம் மீண்டும் எப்போது இடம்பெறும் என்பது இதுவரை தெரியவரவில்லை.

அதேநேரம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உறுதியான தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், கடந்த டிசம்பரில் இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனையும் இலங்கை இந்த வாரத்தில் மீளச்செலுத்தவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையிடம் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கைகளில், திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை வலுப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம், இலங்கை விமானப்படைக்கான டோனியர் கண்காணிப்பு விமானம், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைக்கான கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் அமெரிக்க கடற்படையின் முயற்சியான பஹ்ரைனை தளமாகக் கொண்ட உளவுத்துறை பகிர்வு அலுவலகமான உளவுத்துறை இணைவு மையத்தில் இலங்கை கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்தல், வணிக நடவடிக்கைகளுக்காக பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டில் கலாசார நடவடிக்கைகள் என்பனவும் அடங்குகின்றன.