மீல்மேக்கரில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் மீல்மேக்கரில் புதுவிதமான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். தற்போது மீல்மேக்கரில் சுவையான கட்லெட் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
மீல் மேக்கர் – 100 கிராம்
பொட்டுக் கடலை மாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூம் – கால் தேக்கரண்டி
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியே எடுத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் மீல்மேக்கரை சேர்க்கவும் நன்றாக பிசைந்த பின்னர் அதனை கட்லெட்டாக தட்டி வைத்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தட்டி வைத்திருக்கும் கட்லெட்டை போட்டு பொறித்தெடுத்தால் சுவையான கட்லெட் தயார்.