யாழில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (12-03-2022) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் உயிரிழந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர கடந்த வெள்ளிக்கிழமை இரவு (11-03-2022) பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.
சம்பவ தினத்தன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.