கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
வேலூரைச் சேர்ந்தவர் அனிதா பாரதி. ரசாயன பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். பத்து வருட காலம் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரது வாழ்க்கை, முதல் குழந்தையை கருவில் சுமந்தபோது மாறியது. கர்ப்ப காலத்தில், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக தனது தேடலை ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் அறிந்து கொண்ட பல விஷயங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின.
அவற்றை தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக குழந்தை பிறப்பு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்தார். 2018-ம் ஆண்டு தனது மையத்தைத் தொடங்கினார். அதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கும், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி கற்பிக்கவும், ஊக்கம் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதுவரை இவரது வழிகாட்டுதல் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் அனிதா பாரதி.
“நான் இயற்கையான முறையில் தாய்மை அடைவது பற்றி பெண்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்குகிறேன். என்னுடைய நோக்கம், பெண்கள் இயற்கையான முறையில் மகப்பேறு பெற வேண்டும் என்பதுதான். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, பதற்றம் அடையாமல் தீர்வு காண்பது பற்றி அறிவுறுத்துகிறேன். தாய்மையடைந்த பெண்கள் மூன்றாவது மாதம் முதல் எட்டாவது மாதம் வரை எவ்வாறு செயல்பட வேண்டும்? கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? கருவை சுமக்கும் காலத்தில் மனநிலையை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்? கர்ப்பிணியின் செயல்களால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அடைய இருக்கும் நன்மை மற்றும் தீமைகள் என்ன? கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்கள் மற்றும் பயிற்சிகள் எவை? பிரசவம் எளிதாக நடைபெற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் கற்றுக் கொடுக்கிறேன்.
குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. அதை நாம் எப்படி கையாள வேண்டும்? அதாவது எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு முறைகள், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் மன எண்ணங்கள் பற்றி அறியவும் பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆகும் வரை, நல்ல முறையில் வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை அளிக்கிறேன்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் எத்தகைய மனம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்?
கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.