கொசு கடித்தலை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்

கொசு கடிப்பது சாதாரண நிகழ்வாக தோன்றினாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையானது. கொசு கடிப்பதை தடுக்க பல வழிகள் உள்ளன. சில வீட்டு வைத்தியமும் கொசுக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டவை.

பருவ கால நிலை மாறும்போது கொசுக்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கிவிடும். கொசுக்களின் சீசன் மீண்டும் வந்துவிட்டது. கொசு கடிப்பது சாதாரண நிகழ்வாக தோன்றினாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையானது. எரிச்சல், அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். கொசு கடித்தால் ஜிகா வைரஸ், சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவக்கூடும். கொசு கடிப்பதை தடுக்க பல வழிகள் உள்ளன. சில வீட்டு வைத்தியமும் கொசுக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டவை.

* தேங்கி நிற்கும் நீர், சாக்கடை கால்வாய் போன்றவைதான் கொசுக்கள் உற்பத்திக்கு மூல காரணமாக அமைந்திருக்கின்றன என்பதால் எங்கும் நீர் தேங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது.

* வீட்டில் பறவைகள், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அவை பருகுவதற்கு வைத்திருக்கும் தண்ணீர் டப்பாக்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தினமும் தண்ணீரை மாற்றிவிட வேண்டும்.

* வீட்டில் செடி வளர்ப்பவர்கள் பூந்தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத பூந்தொட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும். அதுபோல் வேறு பயன்படுத்தப்படாத கொள்கலன்களையும் தலைகீழாக வைக்க வேண்டும்.

* அடிக்கடி கொசு கடித்தால், மின் விசிறிக்கு அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். கோடை நாளில் வெளியில் அமர்ந்தால், கொசுக்கள் கடிக்காமல் இருக்க கையடக்க மின் விசிறியை எடுத்துச் செல்லுங்கள்.

* மிளகுக்கீரை எண்ணெய் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும், கொசு விரட்டியாகவும் பயன் படுத்தப்படுகிறது. எலுமிச்சை போன்ற பிற வாசனைகளுடன் இந்த அத்தியாவசிய எண்ணெய்யை கலந்து சருமத்தில் தடவுவதன் மூலம் கொசு கடியிலிருந்து தப்பிக்கலாம். பெப்பர்மிண்ட் எண்ணெய்யை பாதாம் எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்தவும். இது சிறந்த பலனைத் தரும்.

* லவங்கப்பட்டை சமையலுக்கு மட்டுமின்றி, கொசுக்கடியைத் தடுக்கும் சிறந்த வீட்டு வைத்தியமாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. லவங்கப்பட்டை எண்ணெய் கால் தேக்கரண்டி எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து சருமத்தில் தடவலாம். உடுத்தும் ஆடை மீதும், வீட்டின் அறையிலும் தெளிக்கலாம். அந்த வாசனை கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால் கொசுக்கடியில் இருந்து நிம்மதியாக இருக்கலாம்.

* கற்பூரமும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. அது கொசுக்களை விரட்டும் வகையில் கடுமையான வாசனையை வெளியிடும். அறைக்குள் கற்பூரத்தை ஏற்றிவைத்துவிட்டு அரை மணி நேரம் மூடிய நிலையில் வைத்திருந்தால் போதும். ஒரு கொசு கூட அறைக்குள் இருக்காது.

* பூண்டுவும் கொசுக்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பூண்டு துண்டுகளை நசுக்கி, அவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். பின்பு அந்த நீரை ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் தெளிக்கவும். இந்த கரைசல் கொசுக்களை விரட்டியடித்து விடும். எனவே வீட்டில் பூண்டு வாசனை இருந்தால் கவலைப்படாதீர்கள். அங்கு கொசுக்கள் இருக்காது.

* காபி கொட்டை கழிவுகளும் கொசுக்களை நெருங்க விடாது. தேங்கி நிற்கும் கழிவு நீர் தான் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருப்பதால் அதில் காபி கழிவுகளை தூவி விடலாம். அப்போது நீரில் மேற்பரப்பில் மிதக்கும் கொசு முட்டைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அழிந்துவிடும்.