சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 05 ஆம், 06 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்க முடியும் என சங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் இந்தியக் கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களில் சுமார் 50 வீதமானவை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அரிசி, சீனி, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் போன்று மேலும் சில பலசரக்கு வகைகளும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன.
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் பொழுது குறித்த இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. ஆயினும் துறைமுகத்தில் இருக்கும் கொள்கலன்களை விடுவித்தால் எதிர்காலத்தில் ஒரு கிலோ சீனியை 175 ரூபாவிற்கு, மொத்த விலையில் நுகர்வோரினால் கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் மேலும் 20 வீதமானவை அவுஸ்திரேலியா மற்றும் சீனாவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.
சீனாவில் இருந்து வெள்ளைப்பூடு போன்ற பலசரக்கு பொருட்களும் கொண்டுவரப்படுகின்றன. பருப்பு வகைகள் அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களில் சுமார் 30 வீதமானவை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றனவும் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது