கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் உள்ள ஊகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் அலை அலையாக தோன்றிய இந்த தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இயற்கை பேரிடர் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு கொரோனா தாண்டவமாடியது. கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நிலைமையை மத்திய, மாநில அரசுகள் சமாளித்தன.
இதற்கிடையே தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியா சாதனை படைத்தது. உலக நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதியும் செய்தது. வயது வாரியாக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டு தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த காலகட்டங்களில் சுமார் 2 ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதிலும் பள்ளி, கல்லூரிகள் சரிவர திறக்கப்படாமல் மாணவ, மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது.
அதிலும் மழலை, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு இளஞ்சிறார்களின் கல்வி மேம்பாடு முடங்கியது. இதனால் நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் அதில் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனது. பெற்றோர்களும் சோர்ந்து போனார்கள். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.
இந்த கால கட்டத்தில் தீவிரமாகி இறுதியில் தொற்று பாதிப்புகள் மளமளவென சரிந்தன. கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி கொரோனா கெடுபிடிகள் விலக்கி கொள்ளப்பட்டன. ஆனாலும் பொது இடங்களில் முககவசம் அணிவது, கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனாவில் இருந்து மீண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தற்போது நேரடியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அந்தந்த பள்ளிகள் சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆர்வமிகுதியால் படிப்பிலும் அவர்கள் மிளிருகின்றனர்.