வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் மீது எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்ததால் இப்படம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இதில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட்டின் கதாப்பாத்திரம் பெரும் அளவிற்கு பேசப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர், ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டுடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றதது. இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான பகிர்ந்திருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டதாகவும், இயக்குனர் ராஜமௌலியை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து அவர் நீக்கிவிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஆலியா பட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, ஆர்.ஆர்.ஆர். படக்குழு மீது உள்ள அதிருப்தியால், அப்படம் தொடர்பான பதிவுகளை, நான் எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியதை நான் அறிந்தேன். தற்செயலாக நடந்த இந்த விஷயத்தை வைத்து, வீண்வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் வழக்கமாக என்னுடைய முந்தைய பதிவுகளை மாற்றி அமைப்பது இயல்பான ஒன்று.

ஆர்.ஆர்.ஆர். போன்ற பிரம்மாண்ட படத்தில், நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். சீதா கதாபாத்திரத்தில் நான் விரும்பி நடித்தேன். ராஜமவுலி சார் இயக்கத்தில் நடித்ததை நேசிக்கிறேன். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த விஷயம் குறித்து நான் விளக்கம் கொடுப்பதற்கு காரணம், ராஜமவுலியும் அவரது குழுவினரும், இந்த ஒரு அழகான திரைப்படத்தை உயிர்ப்பிக்க, பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளனர். அதனால் இப்படத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் வரும் தவறான தகவல்கள் அனைத்தையும் நான் மறுக்கிறேன் என்று பதிவிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.