மூளை கட்டிகள் வராமல் தடுக்கும் முத்திரை

உடலுக்கு சரியான ஓய்வு, பசிக்கும் பொழுது சாப்பிடுவது, மனதை அமைதியாக வைத்தல், மேற்குறிப்பிட்ட முத்திரை, யோகா பயிற்சி செய்து மூளை கட்டிகள் வராமல் வளமாக வாழுங்கள்.

மூளையில் எந்த ஒரு கட்டியும் வராமல் வாழ நாம் ஒவ்வொரு பயிற்சிகளாக காண்போம்.

சின் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் வெள்ளை கலர் துண்டு விரித்து அதில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கிருக்கவும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பிரிதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பத்து முதல் இருபது வினாடிகள். பின் கண்களை திறக்கவும். மோதிரவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும் மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

சூரிய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து மோதிர விரலை மடித்து உள்ளங்கையில் படும்படி வைத்து அதன்மேல் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

மேற்குறிப்பிட்ட சின் முத்திரை, மன அமைதியை தரவல்லது. மன அழுத்தத்தை நீக்கும். மூளை செல்களுக்கு நன்கு ரத்த ஓட்டம் பாயும். மூளை செல்கள் புத்துணர்வு பெரும். நல்ல பிராண சக்தி மூளைக்கு கிடைக்கும்.

பிரிதிவி முத்திரை மூளை நரம்பு மண்டலங்களை நன்கு இயங்கச் செய்யும். மூளை செல்கள் புத்துணர்வு பெறும். அப்பகுதியில் கழிவுகள் தங்காது. மண்ணீரலும் நன்றாக இயங்கும். ஜீரண மண்டலமும் நன்கு இயங்கும்.

சூரிய முத்திரை உடலில் எந்தப் பகுதியில் கழிவுகள் இருந்தாலும், கழிவுகள் கட்டிகளாகி மாறி இருந்தாலும் அதனை கரைத்து விடுகின்றது. எனவேதான் இந்த மூன்று முத்திரையும் சிகிச்சையாக கொடுத்துள்ளோம். இந்த முத்திரை செய்து முடித்தவுடன் அர்த்த சிரசாசனம் செய்ய வேண்டும்.

அர்த்த சிரசாசனம் செய்முறை: விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். அதிலிருந்து மெதுவாக எழுந்து உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் விரல்களை கோர்த்து இரு கால்களையும் ஒரு குன்று போல் மெதுவாக உயர்த்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.