இதற்கு இந்த நிறுவனங்களின் சர்வர் இடம்பெற்றுள்ள அமேசான் வெப் சர்வீஸ் சேவையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி செயலிகளான ஸ்விக்கியும், ஜொமேட்டோவும் நேற்று மதியம் முதல் சரியாக செயல்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அந்த செயலிகளுக்கு சென்று உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை, ஆர்டர் கொடுத்த உணவுகள் சரியாக கிடைக்காததால் உணவகங்களின் பக்கத்தில் இருந்து உணவை டெலிவரி செய்வதற்கு தாமதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சனையை அனைத்து பயனர்களுக்கும் இல்லாமல் சில பயனர்கள் மட்டுமே சந்தித்துள்ளனர்.
இதையடுத்து பயனர்கள் ஜொமேட்டோ, ஸ்விக்கியை ட்விட்டரில் குறிப்பிட்டு புகார் அளித்து வருகின்றனர். தொடர்ந்து புகார் வருவது அதிகரித்ததால் கஸ்டமர் கேர் நபர்கள் பதிலளிப்பதையும் நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொமேட்டோ, ஸ்விகி செயலிகள் செயலிழந்து இருப்பதாக அந்த நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இதற்கு இந்த நிறுவனங்களின் சர்வர் இடம்பெற்றுள்ள அமேசான் வெப் சர்வீஸ் சேவையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தரப்பில் இருந்து பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை.
தற்போது இந்த பிரச்சனை பெரும்பாலான பயனர்களுக்கு சரி செய்யப்பட்டுவிட்டாலும், சிலருக்கு மட்டும் பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.