பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.
கீ செயின்:
பார்ப்பதற்கு சாதாரண ‘கீ செயின்’ போல தோற்றம் அளிக்கிறது இந்தக் கருவி. தனியாக இருக்கும் பெண்கள் ஆபத்தை சந்திக்கும்போது, தங்களால் சத்தமிட்டு அருகில் இருப்பவரை அழைக்க முடியாத நேரத்தில், இதில் உள்ள செயினை சற்று இழுத்தால் போதும். இந்தக் கருவியில் இருந்து சுமார் 120 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழும். அருகில் இருப்பவர்கள் அதைக் கேட்டு இவர்களுக்கு உதவ முடியும்.
மேலும் இந்த கீ செயினில் உள்ள பொத்தானை அழுத்தும்போது, ஒளிரக்கூடிய வகையில் சிறிய எல்.இ.டி. பல்பும் இணைக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் இல்லாத இடங்களில் இதன் உதவியோடு எளிதாக நடக்க இயலும். சிறிய அளவில் இருப்பதால் இதைச் சாதாரணமாக கைப்பை அல்லது கைபேசி முதலியவற்றில் கீ செயினாக தொங்க விடலாம்.
கைக்கடிகாரம்:
இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு உபயோகமானது இந்த ஸ்மார்ட் கடிகாரம். கைபேசியில் உள்ள ப்ளூ-டூத்துடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்து நேரிடும் நேரத்தில் இதன் பக்கவாட்டில் உள்ள பொத்தானை 2 முறை அழுத்த வேண்டும். உங்கள் கைபேசியில் இருந்து நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சென்றடையும்.
இதில் அதிகபட்சம் 9 அவசரகால அழைப்பு விவரங்களை சேமித்து வைக்க முடியும். தேவையான மாற்றங்களையும், ஸ்மார்ட் கடிகாரத்தின் அப்ளிகேஷனில் மாற்றியமைக்க இயலும். பணிக்கு, கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
எலக்ட்ரிக் ஷாக் டார்ச்:
சாதாரண நேரத்தில் ‘டார்ச் லைட்’ போல ஒளியை மட்டுமே தரக்கூடியது இது. ஆபத்து நேரத்தில், இதில் இணைத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்களுக்கு எதிரில் இருப்பவரை, இதன் விளிம்பில் ஏற்படக்கூடிய மின் உமிழ்வைக் கொண்டு எளிதாக தாக்கி உங்களை தற்காத்துக்கொள்ளலாம். கைப்பைக்குள் வைத்து எடுத்துச்செல்லும் வகையில் இது எளிதான வடிவமைப்புடன் உள்ளது.
மேலும், லிப்ஸ்டிக் வடிவ டார்ச் லைட், சாக்லேட் வடிவ எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் சிறு இயந்திரம், துப்பாக்கி வடிவில் வடிவமைக்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே, நெக்லஸ் வடிவில் வடிவமைக்கப்பட்ட எமெர்ஜென்சி தகவல் தெரிவிக்கும் கருவி போன்ற பல உபயோகமான பொருட்கள் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.
எனவே பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.