தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அதன் மீது உள்ள மோகம் மக்களுக்கு குறைவதே இல்லை.
இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த தங்கம் எப்படி உருவானது எனத் தெரியுமா?
முதலில் ஆஸ்டெக் பழங்குடியின மக்கள் தங்கத்தை சூரியனின் வேர்வை என கருதினார்கள். இது உண்மையல்ல என்றாலும், இதைத் தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம். பிரபஞ்சத்தில் காணப்படும் கோடானு கோடி நட்சத்திரங்களை இயக்கிக் கொண்டிருப்பது அணுக்கரு பிணைவு ஆகும்.
பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு அணு வகைகளே உருவாகியிருந்தன. இப்போது நாம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் அணுக்களால்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்தும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன.
இந்த வரிசையில், ஒரு கட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில் ஏற்படும் வினையின் மிச்ச எச்ச சொச்சமாகக் கிடைப்பதுதான் நாம் உட்சபட்ச உலோகமாகக் கருதும் தங்கம். பூமியில் மட்டுமின்றி அண்டம் முழுவதும் உள்ள பல கிரகங்கள் மற்றும் பால்வெளியில் அங்கும் இங்கும் சுற்றித்தெரியும் பல விண்கற்களிலும் கூட தங்கம் உள்ளிட்ட பிற தனிமங்கள் இருக்கக்கூடும்.
தங்கத்தை பரிசோதிப்பது எப்படி?
பொதுவாக நகைகள் வாங்கும்போது, செய்கூலி சேதாரம் ஆகிய இரண்டு கட்டணங்களால் நகையின் விலையைக் கூட்டி, கடைக்காரர்கள் விற்கின்றனர்.
இதற்கு காரணமும் வேலையாட்கள் சம்பளம், வரி, பராமரிப்புச் செலவு இவற்றை ஈடுகட்டத்தான் இந்த விலை அதிகரிப்பு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டணங்கள் இல்லாமல் குறைந்த விலையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடைகளை நாடுவதுதான் ஒரே வழி.
மேலும், மொத்த நகைக்கடைகள் துல்லியமான வடிவமைப்பு கொண்ட, தரமான தங்க நகைகளை மெஷின் மூலம் தயாரிக்கின்றனர்.
எனவே, மிக மிகக் குறைவான செய்கூலி மற்றும் சேதாரக் கட்டணத்தில் மலிவான விலையில் நகைகளை இக்கடைகளால் வழங்கமுடிகிறது.
எப்படி பார்த்து வாங்கலாம்?
அழகுசாதன பொருட்கள் அல்லது வியர்வை பட்டால் தங்கத்தின் நிறம் மாறக்கூடாது. அடுத்து BIS ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை வாங்கலாம்.
தங்கத்தின் தூய்மை சரிபார்க்கப்பட்டது என்பதற்கு BIS ஹால்மார்க் முத்திரை ஒரு சான்று. தங்கம் எவ்வளவுக்கு எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மென்மையாக இருக்கும்.
உதாரணமாக, 18 கேரட் தங்கத்தை காட்டிலும் 22 கேரட் தங்கம் மென்மையாக இருக்கும். நீங்கள் வாங்கும் தங்கம் தண்ணீரில் மிதந்தால், அது தூய்மையில்லாத தங்கம். தங்க நகை அணியும் போது உங்கள் தோலில் எரிச்சல் அல்லது அலர்ஜி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அது தூய்மையில்லாத தங்கம்.