பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழன்னை படத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தி இணைப்பு மொழி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திலும் பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு சமூக வலை தளத்தில் இந்தி தெரியாது போடா என்ற வாக்கியம் பகிரப்பட்டு வந்தது. இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணினின் தமிழணங்கு ஓவியத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் இந்த பிரச்சனை மேலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இதனையடுத்து பல தரப்பிலும் இருந்து ஆதரவான கருத்துகளும் எதிர்ப்பு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழன்னையை அழகாக வரையாமல் தலைவரி கோலமாக வரைந்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழன்னை படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
இந்தநிலையில் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் நிர்வாகியான முத்து ரமேஷ் நாடார். ‘ஆன்லைன்’ வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருவதாக கூறியுள்ளார். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, வளையாபதி போன்ற பல்வேறு வரலாற்று நுால்களில் தமிழன்னையின் கைகளில் செங்கோல் கொண்டு காட்சி அளிக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தமிழன்னையை தலைவிரி கோலத்துடன் கொடுரமாக இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் மீது நடவடிக்கை ?
ஆர்.ரகுமான் பதிவேற்றம் செய்துள்ள தமிழன்னை படம் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல் என்றும் தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ,ஆர். ரகுமான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலை தளத்தில் உள்ள படத்தை அகற்ற வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.