இலங்கைக்கு மேலும் கடன் வழங்கும் இந்தியா

இலங்கைக்கு மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு மற்றும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் மிகப்பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கூடுதல் எண்ணிக்கையில் உதவிகளை வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு சுமார் 1.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வரும் நிலையில், இந்தியா மேலும் இரண்டு பில்லியன் டொலர் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா இவ்வாறு உதவிகளை வழங்குவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுவதவியை இந்தியா வழங்கத் தீர்மானித்துள்ளமை தொடர்பில் அதிகாரபூர்வமாக இரு நாடுகளும் இதுவரையில் எவ்வித அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.