பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மின் தடை வேளை மின் பிறப்பாக்கி இன்மையால் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் தன்னிலை விளக்கம் ஒன்றினை அதன் பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
“பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 12ஆம் திகதி பிற்பகல் நீர்விநியோகம் தடைப்பட்டது சம்பந்தமாக ஊடகமொன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
அக்குறிப்பில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் நீர்விநியோகம் தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் என்ற வகையில் ஊடகங்களுக்கு விளக்கம் ஒனறை அளிக்க விரும்புகின்றேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை (12) நீர்த்தாங்கிக்கு நீரைச் செலுத்துகின்ற கிணற்றினுள் நீருக்குள் காணப்படுகின்ற மோட்டார் திடீரென பழுதடைந்துவிட்டது.
எங்களது வைத்தியசாலையின் இயந்திரப்பகுதி ஊழியர்கள் கிணற்றிலிருந்து மோட்டரைவெளியே எடுத்து அதனைப் பரிசோதித்த போது அதனை உடனடியாக மீள இயக்க முடியாமலிருந்தது.
இதன் காரணமாக இன்னொரு பதிலீட்டு மோட்டரை கிணற்றினுள் இறக்கி பொருத்த முற்பட்ட போது கிணற்றினுள் இருந்த நீர்க்குழாயுடன் அது பொருந்தவில்லை. பின்னர் அதற்குரிய மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.
எமது வைத்தியசாலை ஊழியர்கள் அதிகாலை 02.00 மணிவரை திருத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 02.00 மணிக்கு நீர்விநியோகம் சீராக்கப்பட்டது. எமது வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதடையவில்லை.
சீரான மின்விநியோகம் மின்சார சபையினால் வழங்கப்படுகின்றது. எமது வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலுள்ள சேமிப்பு நீர் முடிவடைந்த பின்னரே நீர்விநியோகம் தடைப்பட்டது.
நாம் உடனடியாக நீர்விநியோகத்தை சீராக்குவதற்குரிய முயற்சியை ஆரம்பித்து அதிகாலை 02.00 மணியளவில் நீர் விநியோகம் சீராக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.