உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும். ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து 3 வயது வரை அந்த குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றனா்.
அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் சோ்ந்து கல்வி அறிவையும் சமுதாயத்தை பற்றியும் அறிய வைத்து அறிவே ஆற்றல் என உணா்த்துகின்றனா். பிள்ளைகளின் விருப்பத்திற்காக தங்கள் சக்திக்கு மீறி மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை போதிக்கின்றனா். நம்மை ஓய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் அமைகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறையினா் சிலர் வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனா். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்தநிலை ஏற்படும் என்பதை உணராமல் மூடத்தனமாக இருக்கின்றனா்.
இந்த உலகில் வேறு எவராலும் நம் பெற்றோர்களுக்கு இணையாக நேசிக்க முடியாது நம்மை. தன் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
இன்றைய சமூகத்தினர் பெற்றோர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து விட்டு அவா்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலா் அனாதை இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா். தமக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்திருந்தால் இன்று நாம் இத்தகைய அழகான உலகினை பார்த்திருக்க இயலாது வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
தன் பிள்ளைகளுக்காக முழு வாழ்வையே அா்ப்பணிக்கிறார்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகளே தங்களின் வாழ்க்கை என நினைத்து வாழ்கிறார்கள். இதெல்லாம் அவா்களின் கடமை என்று கூறிவிடுகிறார்கள். இன்றைய தலைமுறையினா் கூறுவதுபோல் பெற்றோர்களின் கடமை என்று எடுத்தால் கூட இன்றைய தலைமுறையினா் தங்கள் கடமையை செய்ய வேண்டாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்மை பெற்றவா்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிக்கடன் உள்ளது. கடமை உள்ளது. இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை குழந்தையின் நிலையை உணா்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவார்கள்.
பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவா்கள் நம்மைப் பெறவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. தெய்வத்தை காண்பித்த தெய்வம் பெற்றோர்கள். இவ்வுலகில் பல கேள்விகளுக்கு விடை இல்லை. அதுபோல் தான் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைக்கிறார்கள். அவா்களின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எழுதுவதற்கு எழுத்துகளும் இல்லை. இந்த கேள்விக்கான விடை பெற்றோர்களுக்கு மட்டும் தான் தெரியுமா என்பது கூட கேள்வியாக இருக்கிறது. பேசக் கற்றுக் கொடுத்தவா்களிடம், உங்கள் பேச்சுத் திறமையை காண்பிக்காதீா்கள்…