மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைக்கும் கவுரவம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் பெயரை சென்னையில் ஒரு தெருவுக்கு வைக்கபடவுள்ளது.

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி திடீரென்று இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்கு சிந்தனையால் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் நடித்துக் காட்டியவர். இதனால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். நடிகர் விவேக் இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைமை நிலையப் பொறுப்பாளரும், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான பூச்சி முருகன் பேசியதாவது, நடிகர் விவேக் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சமூகத்திற்கான நல்ல கருத்துக்களை விதைத்தவர்.

தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர். அந்த மரங்களின் வழியாக எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் விவேக். காலையில் முதல்-அமைச்சரிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் என்று முதலைமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதற்கான கடித்தை தயார் செய்யுங்கள் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் நந்தா, நடிகை லலிதா குமாரி, மீனாள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று காலை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.