தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்சன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார்.
அப்போது இரு நாடுகள் இடையே முக்கிய தொழில்களில் பெரிய முதலீடுகளை குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதைத் தொடர்ந்து இன்று மாலை புதுடெல்லி திரும்பும் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும் இரு தரப்பு உறவுகள் பாதுகாப்பு, தொழில்நுட்பம் பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.