வாழ்க்கையை சீரமைக்கும் சிந்தனைகள்

எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழும் பொழுது அத்தகைய எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும்

சீரமைக்கும் புதிய சிந்தனைகள்
நம்மால் பின்னோக்கி சென்று புதிய வாழ்க்கையை தொடங்க முடியாது. ஆனால் நாம் நினைத்தால் இன்று முதல் புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும். புறவெளி கண்ணுக்கு தெரிந்துவிடும். பிறர் ஏதாவது சொல்லி விடுவார்கள் என்று கருதி, சேர்த்து வைத்த குப்பைகளை சுத்தம் செய்துவிடுவோம். அகவெளி யாருக்கு தெரியப்போகிறது. நாம பாட்டுக்கு வழக்கம் போல் வாழ்ந்து விடுவோம் என்று நினைத்தால் நமக்கு தான் இழப்பு. அகவெளியிலும் பழையனவற்றைக் கழித்துவிட்டுப் புதியனவற்றைச் சேர்த்துக் கொள்வது உத்தமமாகும். மனசுக்குள்ளே காயங்கள் தரும் நிகழ்வுகளை மறக்கலாம்.. மன்னிக்கலாம். புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். நம்மை மாற்றிக் கொள்ளலாம், புத்துணர்ச்சி கொள்ளலாம், புதிதாக எதிலாவது ஈடுபடலாம்.

மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்கள்- நல்ல எண்ணங்கள் அதாவது நேர்மறை சிந்தனை என்றும், தீய எண்ணங்கள் அதாவது எதிர்மறை சிந்தனை என்றும் இருவகைப்படும். நம் எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைக்காமல் இருந்தால் அது நல்ல எண்ணங்கள். மாறாக துன்பம் விளைவித்தால் அது தீய எண்ணங்கள்.

வாழ்வில் நமக்கு சாதகமாகவே எல்லாம், எப்போதும் நடக்க வாய்ப்பில்லை. நமக்கு பிடிக்காத சம்பவங்கள் நடந்தாலோ, பிடிக்காத வகையில் யாரேனும் நடந்து கொண்டாலோ, அதை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதை தீர்மானிப்பது நம் மனம். நம் மனதில் தீய எண்ணங்கள் வளர அனுமதித்தால், தாறுமாறாக பிரேக் இல்லாத வாகனம் போல செல்லத் தொடங்குகிறது. நாம் நம் நியாயமான ஆசைகளை அடைய சரியான, நிதானமான நல் வழியில் நேர்ப்பாதையில் பயணிக்கிறோமா? அல்லது பேராசையால் உந்தப்பட்டு, தீய வழியில், குறுக்குப் பாதையில் பயணிக்கிறோமா? என்பதை நடுநிலையோடு நமக்கு நாமே சற்று சிந்தித்து இப்போது சுயபரிசோதனை செய்யலாம்.

நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்போது, அதனை பின்வருமாறு சமாளிக்கலாம். புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம், இனிமையான பாடல்களை கேட்கலாம். தியானத்தில் ஈடுபடுதல், புன்னகை தவழும் முகத்துடன் வலம் வருதல், முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் இருத்தல் போன்றவைகளில் ஈடுபடலாம்.

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்று உறுதிகொள்ளலாம். ‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனையை கொடுக்கிறாய்?’ என்று புலம்புவதால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நம்மோடு பயணிப்பவர்களில் பணம் இருக்கும் மனிதர்களிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதர்களிடம் இருந்து ஆறுதல் மட்டுமே கிடைக்கும். ‘தன்னால் உதவமுடியவில்லையே!’ என்ற வருத்தத்தை நாம் ஏன் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். நாம் கொஞ்சம் யோசித்தால் நம் பிரச்சினைகளை நாமே சரிசெய்ய முயற்சித்து அதில் வெற்றி கண்டு விடலாம். அப்படி வெற்றிகாணும்போது நம்ம மேல நமக்கு ஒரு லவ் வரும் பாருங்க. அந்த உணர்வே தனி. அது போன்ற உணர்வையும் ரசிப்போமே.

இன்னொரு பெரிய ரகசியம் சொல்கின்றேன். எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழும் பொழுது அத்தகைய எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும். முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களோடு அரட்டை , சின்ன சின்ன விளையாட்டுகள் வாயிலாக மகிழ்வை தருவது, பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு நன்னெறி, வாழ்வியல், விளையாட்டு, யோகா, நடனம், கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு திறன் குறித்து இலவசமாக கற்றுக் கொடுத்தல் போன்றவைகளில் ஈடுபடலாம். பெரிய ஆத்ம திருப்தி மனம் முழுவதும் சூழ்ந்திருக்கும் அந்த நேரத்தில் எங்கிட்டு இருந்து எதிர்மறை எண்ணம் நம்மை சூழும், தலைதெறிக்க ஓடி விடும்.

நேர்மறை எண்ணம் நம்மை சூழும்போது நாம் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடும் சக்தி நமக்கு வந்து விடும். அதன்மூலம் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தம் குறையும். பணி செய்யும் சூழல் மேம்படும். பணியின் தரம் அதிகரிக்கும். அப்போது தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும். எல்லாவித சூழல்களிலும் உற்சாகத்துடன் வலம் வரும் நம்மை பிறர் வரவேற்க தயாராகி விடுவார்கள்.