பாடசாலை அதிபரை பழிவாங்க மாணவன் மேற்கொண்ட செயல்!

பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றை சேர்ந்த மாணவர்கள் இருவர், தம்மை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு எரியூட்டியுள்ளனர்.

பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த எச்சரிக்கையை அடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த தீ விபத்தின்போது பாடசாலையின் அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன.

இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் படிக்கும் 12 மற்றும் 7 வயதுடைய இரண்டு மாணவர்களே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

தவறான செயல்களை கண்டித்தமைக்காக அதிபர் மீது கோபம் கொண்டே அவர்கள் இந்த எரியூட்டலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்