சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள் எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.