வெள்ளை நிற முட்டை சிறந்ததா? பழுப்பு நிற முட்டை சிறந்ததா? என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது. இதற்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.
முட்டையை பொரியல் முதல் ஆம்லேட் வரை பல வழிகளில் சாப்பிடலாம். புரதம் மட்டுமின்றி பிற ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். வெள்ளை நிற முட்டை சிறந்ததா? பழுப்பு நிற முட்டை சிறந்ததா? என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது.
ஏனெனில் வெள்ளை நிற ரொட்டி, வெள்ளை சர்க்கரையை விட பழுப்பு நிற ரொட்டி, பழுப்பு நிற சர்க்கரை (பிரவுன் சுகர்), முழு கோதுமை போன்றவை சிறந்ததாக கருதப்படுகின்றன.
முட்டையை பொறுத்தவரை வெள்ளை முட்டையை விட பழுப்பு நிற முட்டையின் விலை அதிகம். முட்டைகளின் தோற்றத்திலும் வேறுபாடுகள் வெளிப்படும். பழுப்பு நிற முட்டை வெள்ளை நிற முட்டையை விட கருமையாக இருக்கும். மேலும் அவற்றினுள் இருக்கும் மஞ்சள் கருவும், வெள்ளை முட்டைகளில் உள்ள மஞ்சள் தோற்றத்தை போல் அல்லாமல் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதுபோல் பழுப்பு நிற முட்டைகளின் ஓட்டில் படர்ந்திருக்கும் நிறமி, வெள்ளை முட்டை ஓட்டில் இருக்காது.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு முட்டைகளையும் ஒப்பிடும்போது அவற்றுள் ஒரே விதமான ஊட்டச்சத்துக்கள்தான் இருக்கும். ஆம்..! சாதாரண முட்டையில் புரதம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், கொழுப்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகள் இரண்டிலும் அவை ஒரே அளவில்தான் நிரம்பி இருக்கின்றன. அதனால் எந்த முட்டையை சாப்பிட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மை ஒரே மாதிரிதான் இருக்கும். பழுப்பு நிற முட்டைகள் ‘ஆர்கானிக்’ தன்மை கொண்டவை என்ற கருத்து நிலவுகிறது. அதில் உண்மையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறுபடும். அதாவது, பழுப்பு நிற முட்டைகள் வெள்ளை முட்டைகளை விட வித்தியாசமான சுவை கொண்டவை.
பழுப்பு நிற முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழி இனத்திற்கு சிறந்த உணவுகள் வழங்கப்படுவதால், அந்த முட்டையின் விலை அதிகமாக இருக்கிறது. இரு கோழி இனங்களுக்கும் ஒரே மாதிரியான உணவை அளித்தால், சுவையில் வித்தியாசம் இருக்காது.