இலங்கை முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (08-05-2022) பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் நீதித்துறை சேவை சங்கம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
நேற்று காலை (07-05-2022) முதல் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகளின் பாதுகாப்பை வழங்குமாறு அனைத்து பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை மீறி தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
இது தொடர்பில் தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை நீதிச்சேவை சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.