பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரது ராஜினாமா அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமரை பதவி விலகுமாறு அரச தலைவர் கோரியதாக முன்னைய செய்திகள் கூறப்பட்ட போதிலும், அந்த செய்திகளை மறுத்த பிரதமர், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஆளும் பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்களை அடுத்து, பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பதவி விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.