மூட்டுவலியை போக்கும் யோகச் சிகிச்சை

இந்த யோகா, முத்திரைகளை செய்து வந்தால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலி நீங்கும். மூட்டு வலி இல்லாதவர்களும் அவசியம் பயிற்சி செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் மூட்டு வலி வராமல் வாழ முடியும்.

உட்கட்டாசனம்:விரிப்பில் நேராக நிற்கவும். இரு கால்களும் சேர்த்து நிற்கவும். இரு கைகளையும் ஒரு அடி முன்னாள் நீட்டவும். ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக மூட்டை மடக்கி படத்தில் உள்ளதுபோல் இருக்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். மூன்று முறைகள் செய்யவும்.

பலன்கள்:மூட்டுக்கள் நன்கு பலம் பெரும். மூட்டுச் சவ்வுகள் நன்றாக இயங்கும். மூட்டுத் தேய்மானம் ஏற்படாது. மூட்டு வீக்கம், மூட்டு வலி வராமல் வாழலாம். நாம் சிகிச்சையாக பார்ப்பதால் இந்த ஆசனம் முடித்தவுடன் வாயு முத்திரையும், அபான முத்திரையும் செய்யவும்.

வாயு முத்திரை:விரிப்பில் நேராக அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் ஆள்காட்டி விரலை மடித்து அதன் நடுவில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

அபான முத்திரை:நிமிர்ந்து விரிப்பில் அமரவும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரல், மோதிர விரல் அதன் மையத்தில் பெருவிரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

அனுசாசன முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரலை உள்ளங்கையில் மடக்கி வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மையத்தில் படத்தில் உள்ளது போல் வைக்கவும். ஆள்காட்டி விரலை நேராக வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரு கைகளையும் தோள்பட்டை பக்கத்தில் படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் செய்யவும்.

மேற்குறிப்பிட்ட ஆசனத்தையும் மூன்று முத்திரைகளையும் செய்யுங்கள். மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலி நீங்கும். மூட்டு வலி இல்லாதவர்களும் அவசியம் பயிற்சி செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் மூட்டு வலி வராமல் வாழ முடியும்.

உணவு:தினமும் மூன்று வெண்டைக்காய் சாப்பிடுங்கள். பச்சையாக சாப்பிடவும். பூண்டு, வெங்காயம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். கந்தகச் சத்து உடலுக்கு இதன் மூலம் கிடைக்கும். அன்னாசி பழம் அடிக்கடி உணவில் எடுக்கவும். இதில் புரோமிலியன் எனும் சத்து மூட்டு அழற்சியை குறைக்கவல்லது.

எலுமிச்சை பழம், காலிபிளவர், பீட்ரூட் அடிக்கடி எடுக்கவும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது.

தவிர்க்க வேண்டியவை:புளி, ஊறுகாய், தக்காளி பழம், ஆட்டுக்கறி, கோழிக்கறி, கொழுப்பு பொருட்களை தவிர்க்கவும்.

உணவில் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடித்து மேற்குறிப்பிட்ட பயிற்சிகளும் செய்தால் மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.